2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, மும்பைக்குள் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், சிஎஸ்டி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் திட்டமிட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
போலந்து நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி, இத்தாலி நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுல்வியோ மார்டூசியெல்லோ ஆகியோர் எழுதிய கடிதத்தில், "பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டுவரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக அந்நாடு எம்மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசியல் ரீதியாகவோ கொள்கை நோக்கமாகவோ பலன்பெறும் வகையில் பயங்கரவாதம் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகின்றனர்.
ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான நாங்கள், பயங்கரவாதம், தீவிரவாத செயல்களை எதிர்க்க உறுதிபூண்டுள்ளோம். பயங்கரவாதத்தை ஊக்குவித்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும். அதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது.
அமெரிக்கா, இந்திய புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. இதனை, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும், இன்றைய நாள்வரை தாக்குதல் நடத்த ஊக்குவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.