ஐரோப்பிய நாடாளுமன்றம், நேற்று (செப்.10), மியான்மர் தேசிய விவகார ஆலோசகர் ஆங் சான் சூகியை மனித உரிமைகளுக்கான உயரிய பரிசுகளில் ஒன்றான ’சகாரோவ் பரிசு’ வென்றவர்களின் குழுவிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. ரோஹிங்கியா இஸ்லாமிய இனக்குழுவின் மீதான அடக்குமுறை குறித்து, சூகி அமைதி காத்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீண்டகால அரசியல் கைதியாக இருந்து வந்த சூகி, மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிரான அவரது அஹிம்சை வழியிலான போராட்டத்திற்காக பாராட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றார்.
ஆனால் சமீப ஆண்டுகளில், ரோஹிங்கியா இனக்குழுவினர் மீது மியான்மரில் நடந்தேறிய தாக்குதல்கள் குறித்து சூகி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் மீது சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் 700,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இனக்குழுவினர் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் அண்டை நாடான பங்களாதேஷுக்கு அவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், இந்த ராணுவத் தாக்குதல் குறித்து அமைதி காத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், ஆங் சான் சூகியை மனித உரிமைகளுக்கான உயரிய விருது பெற்றவர்களின் குழுவில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இது குறித்து "மியான்மரில் ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிராக நடந்தேறி வரும் குற்றங்களையும் அத்துமீறல்களையும் ஆங் சான் சூகி அமைதியாகக் கடந்தும், அவற்றிற்கு எதிராக செயல்படத் தவறியும் உள்ளார். எனவே அதன் எதிரொலியாக, சாகரோவ் பரிசு வென்றவர்கள் அடங்கிய சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் முறையாக அவரை விலக்கி வைக்க முடிவெடுத்துள்ளோம்" என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு சூகி சாகரோவ் பரிசை வென்று, 23 ஆண்டுகள் கடந்து 2013ஆம் ஆண்டு அதனைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா தலையீடு - அடித்துக்கூறும் மைக்ரோசாஃப்ட்