பிரிட்டன் நாட்டிலிருந்து 1997ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பாதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகித்துவந்தாலும், சீன அரசின் தலையீடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஹாங்காங்கின் பாதி தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும்வகையில், கடந்த ஜூன் மாதம் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை ஜனநாயகவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் செஞ்சீன அரசு அமல்படுத்தியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்த ’ஆப்பிள் டெய்லி’ என்ற ஊடகத்தின் அதிபர் ஜிம்மி லாய் உள்ளிட்ட ஏராளமான ஜனநாயக இயக்கத்தினரை ஹாங்காங் அரசு கைதுசெய்தது.
இந்நிலையில், இன்று (ஜன. 06) முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான கேரி ஃபேன், லாம் சியூக்-டிங், பென்னி தை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தினர் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தேர்தலில் பங்கேற்ற அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
அதிகாரப்பூர்வமற்ற தேர்தலில் பெறும் வாக்கை முன்னிறுத்தி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றெடுத்து ஹாங்காங் அரசை முடக்க வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து அவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக அந்நகர நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க : கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8.68 கோடி பேருக்கு பாதிப்பு