இந்திய கப்பல்படையின் முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானை உளவு பார்த்ததாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உளவு பார்த்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் அவருக்கு மரண தண்டனை வழங்கியது.
இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஜாதவை சந்திக்க பலமுறை முயன்றும் பாகிஸ்தான் அனுமதி வழங்க மறுத்தது. இதைத் தொடர்ந்து, ஜாதவ் மீதான விசாரணையில் பாகிஸ்தான் வியன்னா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் வழக்கு விசாரணை முடியும் வரை ஜாதவிற்கு வழங்கப்படும் மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பினை சர்வதேச நீதிமன்றம் இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு வழங்கவுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் அப்துல்காவி, யூசஃப் ஆகியோர் விசாரிக்கின்றனர். இவ்வழக்கின் தீர்ப்பு இந்தியாவிற்கு சாதகமாக அமையுமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.