காபூல் (ஆப்கானிஸ்தான்): தலிபான்கள் ஆப்கானின் நகரங்களை கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் முழுவதும், இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கான் தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்கள் தவிர, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணிவரை அனைத்துவித செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு தனது நேட்டோ படைகளை திரும்பப்பெற்றுவரும் சூழலில், ஆப்கானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிவருகின்றனர்.
இரவு நேர ஊரடங்கு
20ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் வந்திருப்பதால், அதிகாரத்தை இழந்த தலிபான்கள், தற்போது ஆப்கானிஸ்தானின் முக்கிய சாலைகளை கைப்பற்றியுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூல், பஞ்ச்ஷீர் மற்றும் நங்கர்ஹார் ஆகிய நகரங்களில் இந்த ஊரடங்கு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலிபான் கைகளில்...
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது முழுபடைகளும் வெளியேறிவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தலிபான்களின் கை ஆப்கானிஸ்தானில் ஓங்கியுள்ளது.
அமெரிக்க நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினால், ஆறு மாதங்களுக்குள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிவிடுவார்கள் என அமெரிக்க உளவு அமைப்புகள் அஞ்சுவதாக ஜூன் மாதமே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்கான்- தஜிகிஸ்தான் எல்லைக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பிய ரஷ்யா!