கோவிட் 19 வைரஸ் தொற்று சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் பரவத்தொடங்கியது. உலகம் முழுவதும், இதுவரை இந்த வைரஸ் தொற்றின் காரணமாக 1,50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தொற்று தொடர்பாக பல்வேறு ஆராய்சிகள் நடைபெற்றுவருகிறது. அதிலும் குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் தாயிடமிருந்து பிரசவத்தின்போது குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று பரவுமா என்பது குறித்த ஆய்வுகளும் நடைபெற்றுவருகிறது. இது குறித்து கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோவிட் 19 வைரஸ் தொற்று பிரசவத்தின்போது குழந்தைகளுக்கு பரவ வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இது குறித்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வூஹான் நகரில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பெரும்பாலோனருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மூச்சு விடுவதில் சிரமப்பட்டுவந்த நான்கு குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், மூன்று குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு குழந்தையின் தாய், தனது குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்திவிட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு உடம்பில் தடிப்புகள் (Rashes) இருந்துள்ளது. இருப்பினும், அவை ஒரு சில நாள்களில் தானாக குணமடைந்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
"அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று பரவுவது இல்லை. எனவே, இது பாதுகாப்பான முறை. இருப்பினும், சுகப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று பரவுவது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், இது குறித்து இன்னும் ஆரயாச்சிகள் தேவை" என்று சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொடூர கொரோனா!