மாலத்தீவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தற்போதைய அவைத் தலைவருமான முகமது நசீத்தின் சீன எதிர்ப்பால் அந்நாட்டில் பதற்ற நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கோபத்தைச் சம்பாதித்து விடக்கூடாது என்பதற்காகக் கவனமாக அறிக்கைகளை வெளியிடும் அதிபர் இப்ராகிம் சாலியைப் போலவோ, அவரின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாலியைப் போலவோ நசீத்தின் அறிக்கைகளும் அவரின் வார்த்தைகளும் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. சீனாவை கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பிடும் அவர், நில ஆக்கிரமிப்பு நாடு என்றும் கடந்த வெள்ளியன்று குறிப்பிட்டு கடும் விமர்சனத்தை வைத்தார்.
மாலத்தீவின் முக்கியத் தலைவரான இவர், பல ஆண்டுகளாக நாடு கடந்து வாழ வேண்டியிருந்ததுடன் மட்டுமல்லாமல் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட முடியாமலும் ஆக்கப்பட்டார். ஆனால், அத்தேர்தலில் ஆச்சரியமான வெற்றியின் மூலம் நசீத்துவின் மாலத்தீவு மக்களாட்சி கட்சியானது அதிகாரத்துக்கு வந்தது. அக்கட்சி சார்பில் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட சாலி அதிபராக, நாடாளுமன்றத்தின் அவைத்தலைவராக நசீத் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் முதல் பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.
பிரதமர் மோடியையும் பிற தலைவர்களையும் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நசீத், சீனா சிறு நாடுகளுக்கு வழங்கும் கடனைப் பற்றிக் கூறுகையில், சிறிய நாடுகளைத் தெளிவாக ஒரு பொறியில் விழக்கூடியவாறே கடன்களையோ வளர்ச்சிக்கான உதவிகளையோ சீனா வழங்குகிறது என்றும்; அந்த முறையை சீனா கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து விரிவாகவும் பிரத்யேகமாகவும் நமது ஈடிவி பாரத் செய்திக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ' கிழக்கிந்திய கம்பெனியைவிட அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் எங்களின் வளர்ச்சிக்கான உதவியைச் செய்யவில்லை. அக்கடன் எங்களை வீழ்த்துவதற்கான பொறி. இப்போதைக்கு நாங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பணம் செலுத்தியே ஆக வேண்டும். ஆனால், சீன அரசாங்கம் கடன் வழங்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் ' என்றார் நசீத்.
மேலும் பேசிய அவர், ' சுற்றுலாவையே பெருமளவில் சார்ந்திருக்கும் மாலத்தீவு நாடானது, சீனாவுக்கு 3.5 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது. அக்கடன் முந்தைய அதிபர் யமீனின் சர்வாதிகார ஆட்சியில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக வாங்கப்பட்டது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவது இயலாத காரியம். அவ்வளவு பணம் எங்களுக்கு எப்படியும் வரப்போவதில்லை. ஆனால், மிகப்பெரிய அளவிலான பணத்தை நாங்கள் செலுத்தியே ஆக வேண்டும். ஆகவே, உள்நாட்டில் பல அரசியல்வாதிகளைப் போல அல்லாமல் அதை எங்களால் இயன்ற அளவிற்குத் திருப்பிச் செலுத்துவோம் ' என்றார்.
ஜனநாயகரீதியில் மாலத்தீவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான நசீத், ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டதை எதிர்த்து நாடு கடந்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும் வரும் காலங்களில் கடன் வழங்கும் முறையை சீனா திருத்தம் செய்யாவிட்டால், அதை மனித உரிமைகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு மாலத்தீவு கொண்டுசெல்லும் எனவும் நசீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யமீனால் கையெழுத்திடப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) பற்றி அவர் பேசுகையில், ' 2018இல் எந்த எதிர்க்கட்சியுமே இல்லாத நிலையில்தான் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அது காலாவதியாகி நீண்ட நாளாகிவிட்டதால், தற்போது அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சீனாவின் செயல்பாடுகள் ஏகாதிபத்தியம், நில அபகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவாறே உள்ளன' என அவர் விளக்கமளித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவிலிருந்து 250 பேர் ஐ.எஸ். படையில் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் வெறுப்புப் பிரசாராத்தில் ஈடுபட்டுவரும் ஜாகிர் நாயக்குக்கு இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் தேசமான மலேசியா, அடைக்கலம் தருவது குறித்து நசீத்திடம் கேட்டதற்கு, கவலை தெரிவித்த அவர், ' இந்தியாவால் தேடப்படும் ஜாகிருக்கு மாலத்தீவில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது ' என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது மாலத்தீவில் மேற்கொள்ளப்படும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான விரைவு வளர்ச்சித் திட்டங்களை நீட்டிக்கும்படி நசீத் கேட்டுக்கொண்டார். தன்னுடைய நாடாளுமன்றக் குழுவுடன் அவர் இந்தியாவில் இருந்தபோது இஸ்லாமிய பயங்கரவாதம், ஐ.எஸ். அமைப்பு பயங்கரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் மாலத்தீவில் அல்கொய்தாவின் தலைகாட்டல் குறித்தும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இந்திய அரசின் நிலை குறித்து நசீத்துவிடம் நாம் கேட்டதற்கு, ' இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரத்துக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்திய ஜனநாயக அமைப்பின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய நாடாளுமன்றம் முறையாக செயல்படுகிறது என நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அரசாங்கமானது தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியைத்தான் தற்போது நிறைவேற்றியுள்ளது. எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதற்கான காரணங்களில் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்துவதும் ஒன்று' என்றார் நசீத்.
சார்க் மாநாடு குறித்து பேசிய நசீத், ' தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாய் இருந்தாலும், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC - சார்க்) எதிர்காலம் மிக மோசமாகக் காணப்படுகிறது. அடுத்த சார்க் மாநாட்டை மாலத்தீவில் நடத்தலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
உரி பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 2016இல் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியாவும் அண்டை நாடுகளும் புறக்கணித்திருந்தன. அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது. பிராந்திய ஒத்துழைப்புக்கான வேறு ஒரு மாற்று ஏற்பாட்டைக் கண்டடையும் வரை சார்க் அமைப்புடன் தொடர்வது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.
அடுத்த சார்க் உச்சி மாநாடே மாலத்தீவுகளில் நடக்குமா என்பதே சந்தேகமாக தான் உள்ளது. மாநாட்டில் ஒவ்வொரு தலைவரும் வந்துபோக வசதியான ஓர் இடம் கிடைப்பது கடினம். சார்க் அமைப்பைப் பற்றித் தீவிரமாக மீள் யோசனை செய்ய வேண்டும். மறுபடியும் அந்தக் கட்டமைப்பு ஆக்கத்தில் என்ன செய்யமுடியும் என்பதையும் பார்க்கவேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிங்க:
மீண்டும் நீராவி இன்ஜின் சத்தம்: இது 165 ஆண்டுகளின் புதுமை!
இதையும் படிங்க : நாடாளுமன்றம் செல்கிறது ட்ரம்ப் பதவி நீக்க தீர்மானம் !