நிலவிலிருந்து பாறைகளை எடுத்துவருவதற்காக, சீனாவின் சாங்கி-5 விண்கலம் கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி 4.30 மணியளவில் ஹைனானில் உள்ள வென்சாங் விண்கலம் மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.
நிலவில் தரையிறங்கிய விண்கலம், வெற்றிகரமாக நிலவின் மாதிரிகளை சேமித்துமுடித்தது. அதன்பின் கடந்த 3ஆம் தேதி அந்த விண்கலம் நிலவுப் பரப்பிலிருந்து புறப்பட்டது. இது நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ராக்கெட்டுடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. பின்னர், 14ஆம் தேதி விண்கலம் பூமியை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
இந்நிலையில், பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சாங்கி-5’ விண்கலம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சீனாவின் இன்னர் மங்கோலியா மாகாணம் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களைச் சேகரித்த சீன விண்வெளி விஞ்ஞானிகள் அதை ஆய்வுசெய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளி பயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததால், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆய்வுசெய்யும் மூன்றாவது நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.