அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட அந்நாடு முடிவெடுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் தென்மேற்கு சீன நகரான செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா முடிவெடுத்தது. இதையடுத்து, அமெரிக்க அலுவலர்கள் அங்கிருந்து காலி செய்ததைத் தொடர்ந்து, அங்கு ஏற்றப்பட்டிருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.
இதனிடையே, அதை சுற்றியுள்ள பகுதியை சீன காவல்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து பழி வாங்கும் செயலில் ஈடுபட்டுவருவதால் வணிகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு எதிராக ட்ரம்ப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, சீனாவிற்கு இடையே பனிப்போர் நீடித்துவருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கரோனா பெருந்தொற்று, வணிகம், மனித உரிமை, ஹாங்காங் பிரச்னை, தென் சீனக் கடலில் ஆதிக்கம் போன்ற பல்வேறு விவகாரங்களால் இரு நாடுகளுக்கிடையே உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. இதன்விளைவாக, ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூடும் முடிவை அமெரிக்கா எடுத்தது. நாட்டிலிருந்து சீனர்களை வெளியேற்றும் விதமாக ட்ரம்ப் தலைமையிலான அரசு பயணத் தடை, பதிவு செய்வதற்கான தேவைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தென் சீனக் கடலில் சீனாவின் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியான நிலையில், அமெரிக்கா அதனை மறுத்தது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவில் உள்ள சீனாவின் மற்ற தூதரகங்களும் மூடப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: நிறவெறிக்கு எதிராக போராட்டம்: சாலையில் நிர்வாணமாக அமர்ந்த பெண்!