பெய்ஜிங்கைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், குரங்கு பி வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. 53 வயதான அவர், விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இரண்டு குரங்குகளுக்கு உடற்கூராய்வு செய்துள்ளார்.
அதன்பின்னர் அவருக்கு, குமட்டல், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மே 27ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில் மருத்துவர் 'குரங்கு பி வைரஸ்' பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
முதல் உயிரிழப்பு
குரங்கு பி வைரஸ் தாக்கி சீனாவில் மனிதர்கள் உயிரிழப்பது இதுவே முதன்முறை என்பதால் அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இறந்த மருத்துவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களின் மாதிரியைச் சோதனை செய்ததில், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.
இறப்பு விகிதம் அதிகம்
இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ஆம் ஆண்டு முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இது நேரடித் தொடர்பு அல்லது உடல் சுரப்புகளின் பரிமாற்றம் மூலம் பரவும் தன்மைகொண்டது என்றும், இறப்பு விழுக்காடு 70 முதல் 80 வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஜாக்கிரதையாக இருங்கள்
குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மையப் பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா பிடியில் உலகமே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதே நாட்டில் புதிதாக உருவெடுத்துள்ள குரங்கு வைரசால் மருத்துவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்கில் ரசாயனக் கசிவு: 60 பேர் பாதிப்பு