சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் நகரையே முற்றிலும் முடக்கியது. சீனாவின் நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை மெள்ள மெள்ள திரும்பிவருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை சீனாவில் புதிதாக ஆறு பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"வியாழக்கிழமை வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆறு நபர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; நான்கு நபர்களுக்கு சமூகத் தொற்றாக வைரஸ் பரவியுள்ளது.
மேலும், வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு நாள்களாக உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இதுவரை சீனாவில் 4,632 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வரை வெளிநாட்டிலிருந்து சீனா வந்தவர்களில் 1,618 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
வூஹானில் நிலைமை என்ன?
வைரஸ் முதலில் கண்டறியப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரமாக இருந்த ஹூபே தலைநகர் வூஹான் கடந்த சில நாள்களாகவே யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வழிசெய்யும் வகையில் சீனா அரசு நியூக்ளிக் அமில சோதனைகளை அதிகரிப்பதில் முனைப்புக் காட்டிவருகிறது.
அலிபாபாவின் சேவை
மக்கள் மருத்துவ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அலிபாபா, ஜெடி.காம் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய சேவைகளை வழங்கிவருகின்றன. அலிபாபாவின் இந்தச் சேவையைப் பயன்படுத்தி பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 10 நகரங்களில் பொதுமக்கள் தங்களை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்திக்கொள்ள புக் செய்து கொள்ளலாம். இச்சேவை வரும் காலங்களில் மேலும் 28 நகரங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளதாகவும் அலிபாபா தெரிவித்துள்ளது.
திறக்கப்படும் பள்ளிகள்
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவில் உள்ள சுமார் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களில் 38 ஆயிரம் பேரின் சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. குவாங்சோ நகரில் ஏப்ரல் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கோவிட்-19 தொற்று காரணமாக 82,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹாங்காங்கில் 1,035 பேரும் (4 உயிரிழப்பு) மக்காவோவில் 45 பேரும் தைவானில் 427 பேரும் (6 உயிரிழப்பு) இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!