உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துள்ள கோவிட்-19 தொற்று, சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் சீனா எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவின் நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார அமைப்பும் அந்நாட்டிற்குப் பாராட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆனால் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பவர்களின் (asymptomatic) எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது, அந்நாட்டிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்று மீண்டும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் அறிகுறிகள் இல்லாத 27 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் asymptomatic எனப்படும் அறிகுறிகளின்றி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 984ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி 10 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்கள். மூன்று பேர் ரஷ்யாவின் எல்லை மாகாணமான ஹைலோங்ஜியாங்கை சேர்ந்தவர்கள்; மற்ற ஒருவர் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சமூகப் பரவலால் வைரஸ் பரவியுள்ளது. புதன்கிழமை யாரும் கோவிட்-19 தொற்றால் உயிரிழக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலைகளையும் சவால்களையும் கருத்தில் கொண்டு வைரஸ் அதிகமாகப் பாதித்துள்ள இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் தேவையான சுகாதாரப் பணியாளர்களையும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அலுவலர்களையும் அனுப்பி அந்த இடங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
இதுவரை சீனாவில் கோவிட்-19 தொற்று காரணமாக 82 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹாங்காங்கில் ஆயிரத்து 33 பேருக்கும் (4 உயிரிழப்பு) மக்காவோவில் 45 பேருக்கும் தைவானில் 426 பேருக்கும் (6 உயிரிழப்பு) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?