சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று காரணமாக 190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் தற்போது அங்குக் குறைந்து, பொதுமக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கரோனா மீண்டும் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவ ஆலோசகர் ஜாங் நன்ஷான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று கண்டறியப்பட்டது. சார்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஜாங் நன்ஷானின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. இதனால் ஜாங் நன்ஷானை சார்ஸ் ஹீரோ என்றே அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர்.
ஜாங் நன்ஷான் சனிக்கிழமை பேசுகையில், "பெரும்பாலான சீனர்கள் இப்போதும்கூட கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது.
இப்போது நாம் மிக பெரிய சாவலை எதிர்கொண்டுள்ளோம். இப்போது நமது நிலைமை என்பது பல வெளிநாடுகளின் நிலைமையைப் போலவே சிறப்பானதாக இல்லை" என்றார்.
இந்த ஜாங் நன்ஷான்தான் கோவிட்-19 தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் ஆற்றல் உடையது என்று இந்தாண்டு ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் பரவலைத் தொடக்கத்தில் சீனா கையாண்ட விதம் குறித்து அவர் பேசுகையில், "ஆரம்பத்தில் அவர்கள் (சீன அரசு) அமைதியாக இருந்தார்கள். நான் வைரஸ் தொற்றால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்தேன்.
அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளை நான் நம்பமாட்டேன். அதனால் உண்மையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தெளிவுபடுத்த அறிவுறுத்திவருகிறேன்" என்றார்.
சீனாவில் தற்போது வரை 82,947 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் நாடு!