அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ், உய்குர் என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களும் மற்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் நடத்திய விசாரணையில் 71 நிறுவனங்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களின் வறுமையை குறைப்பதற்காக இத்திட்டம் செயல்படுகிறது என்று கூறப்பட்டாலும், தொழிலாளர்கள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், வாராந்திர கொடி உயர்த்தும் விழாக்களில் பெய்ஜிங் அரசாங்கத்திற்கு தாங்கள் விசுவாசத்தை காட்டுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள் அமெரிக்காவிற்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதை நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தில் சேர்க்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒதுக்கீடுகள் இருப்பதாகவும், பங்கேற்க விரும்பாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச சட்டத்தின் கீழ் கட்டாய உழைப்பாக கருதப்படலாம் என சர்வதேச ஆய்வுகள் மையத்தின் மனித உரிமைகள் முன்னெடுப்புகளின் இயக்குநர் ஏமி கே. லெஹ்ர் தெரிவித்துள்ளார்.