சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள சில பகுதிகள் இன்னும் யாருடையது என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சில தீவுகளுக்கு இருதரப்பும் உரிமை கொண்டாடிவருகின்றன.
அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் ஒரு தீவை இருதரப்பும் கொண்டாடிவருகின்றன. இந்தத் தீவிற்கு ஜப்பான் அரசு தோஷிரோ என்றும் சீன அரசு டயோயு என்றும் பெயரிட்டு அழைத்துவருகின்றன.
இந்நிலையில் ஜப்பான் அரசு, இத்தீவின் பெயரை மாற்றுவது குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி இத்தீவின் பெயரை தோஷிரோ என்பதிலிருந்து தோஷிரோ செங்காகு என்று மாற்ற ஜப்பான் அரசு மசோதாவை நிறைவேற்றியது.
இது குறித்து திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "சீன ஆளுகைக்கு உள்பட்ட தீவின் பெயரை மாற்றுவதற்கு ஜப்பான் அரசு நிறைவேற்றியுள்ள மசோதா சீன இறையாண்மைக்கு எதிரானது. இது இருதரப்பிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இது சட்டவிரோதமானது. இந்த மசோதாவின் மூலம் டயோயு தீவின் பெயரை ஜப்பானால் மாற்ற முடியாது. இந்தத் தீவு சீனாவுக்குச் சொந்தமானது.
ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கையை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். இது குறித்து அந்நாட்டு அரசிடம் அதிகாரப்பூர்வமாகத் தொடர்புகொண்டு எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளோம். இது குறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்துவருகிறோம்" என்றார்.