நிலவில் முதன் முதலில் (1969ஆம் ஆண்டு) கால்பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பெரிய கற்கள், மணல் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். பின்னர், 1976இல் ரஷ்யா ‘லூனா 24’ என்ற ஆள் இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி 170 கிராம் கற்களை அங்கிருந்து கொண்டுவந்தது. இந்தக் கற்கள் மூலம் நிலவின் நிலப்பரப்புத் தன்மை, தோற்றம் ஆகியவை ஆய்வுசெய்யப்பட்டது.
தற்போது மூன்றாவது நாடாக சீனா ஆள் இல்லாத விண்கலத்தை கற்களை எடுத்துவர அனுப்பியுள்ளது. சேஞ்ச்-5 என்ற பெயர்கொண்ட இந்த விண்கலம் பெரிய ராக்கெட் மூலம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி 4.30 மணியளவில் ஹைனானில் உள்ள வென்சாங் விண்கலம் மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. சேஞ்ச்-5 விண்கலம், நிலவிலிருந்து கற்களை பூமிக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விண்கலம் சுமார் 20 நாள்கள் நிலவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, சேஞ்ச்-5 விண்கலம் நிலவில் தரையிறங்கியுள்ளது. தற்போது, மாதிரியை எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. மேலும், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் வெற்றிகரமாக வெளிவந்துள்ளன. சுமார், இரண்டு நாள்கள் நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு 2 கிலோ எடை கொண்ட பெரிய கற்களை எடுத்துவரவுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, டிசம்பர் பாதியில் மாதிரிகளைச் சேமித்துக்கொண்டு சேஞ்ச்-5 விண்கலம் பூமிக்கு வரும் எனத் தெரிகிறது.
சீனாவிற்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கற்கள் மாதிரிகள் கிடைப்பதன் மூலம், நிலவின் தற்போதைய நிலையை அறிய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.