உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். மேலும், 600க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் வுஹான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சீன அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் மற்றப்பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பரவாமல் தடுக்க வுஹான், ஹூபே, ஹூவாங்காங், ஈஜோ, ஜிஜியாங், கியாஞ்சியாங் ஆகிய ஐந்து நகரங்களுக்கான விமானப்போக்குவரத்து, ரயில்போக்குவரத்து என அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று சீன அலுவலர்கள் அறிவித்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதியிலுள்ள மக்கள் முகமூடிகள், பாதுகாப்பு உடைகள், கிருமிநாசினி போன்றவற்றை உபயோகிக்க வேண்டும் என்றும் வேறுபகுதிகளுக்கு குறிப்பிட்ட காரணம் இல்லாமல் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையும் மீறி செயல்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டு அரசு ஒரு வார காலம் விடுமுறை அறிவித்து பல்வேறு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது, வைரஸ் பரவும் பயத்தைக் கருத்தில் கொண்டு பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பெய்ஜிங்கின் புகழ்பெற்ற ஏகாதிபத்திய அரண்மனை 'தடைசெய்யப்பட்ட நகரம்' சனிக்கிழமை மூடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. சீனாவின் துரிதமான இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், இது உலகின் மற்றப்பகுதிகளுக்கு நோய் பரவுதலைத் தடுக்கும் என்றார்.
சிஞ்சியாங், ஹாங்காங், மக்கோவோ, தைவான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘பஜ்ரங்தளத்தை தடை செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ - பசவராஜ் பொம்மை திட்டவட்டம்