கோவிட்-19 தொற்று முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டிருந்தாலும் அந்நாட்டு அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாகத் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த ஒருமாத காலமாகவே சீனாவில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் தொற்று குறித்து தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை 14 பேருக்கு அறிகுறிகளுடன் கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் சீனாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 901ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காயிரத்து 630ஆக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களில் 11 பேர் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபே மாகாணத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எந்தவொரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் asymptomatic cases-இன் எண்ணிக்கையும் சீனாவில் கண்டறியப்பட்டுவருகிறது. சனிக்கிழமை புதிதாக 20 asymptomatic cases-கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபே மாகாணத்தில் மட்டும் இதுவரை 68 ஆயிரத்து 129 பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரத்து 334 பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஹாங்காங்கில் ஆயிரத்து 45 பேரும் (4 உயிரிழப்பு) மக்காவோவில் 45 பேரும் தைவானில் 440 பேரும் (6 உயிரிழப்பு) இந்த வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு வழியாக குறைந்த கரோனா பாதிப்பு: நிம்மதி பெருமூச்சுவிடும் சிங்கப்பூர்!