உலகம் முழுதவதும் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது தீவிரமாக உள்ள நிலையில், அந்த நோயின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. குறிப்பாக, வூஹான் நகரில் 11 வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு கடந்த எட்டாம் தேதி தளர்த்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 99 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டிலிருந்த வந்த 97 பேர் அடங்குவர். அதேசமயம் இவர்களில் 63 பேருக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் இத்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் 82,052ஆக அதிகிரித்துள்ளது. அதேசமயம், சீனா சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவலின்படி நேற்று ஒருநாளில் அயல்நாட்டிலிருந்த வந்த 1,280 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அவர்களில் 481 பேர் குணமடைந்த நிலையில், 799 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹூபே மாகாணத்தில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார். அதன்பிறகு அந்நாட்டில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,336ஆக உள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,575ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா சென்றடைந்தது ’ஹைட்ரோகுளோரோகுயின்’