சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் கரோனா தொற்றை அந்நாட்டு அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அந்நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்தது.
அதன் பின் நிலைமையின் தீவிர மின்மை உணர்ந்த சீனா பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அங்கு கரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது.
இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறிகுறிகளின்றி இருக்கும் 15 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு மட்டுமே புதிதாக கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஜிலின் நகரில் மீண்டும் கரோனா பரவுவதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜிலின் மாகாதண்ததில் 133 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 106 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 25 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், அவர்களில் மூன்று பேரின் நிலைமை மோசமாகவுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 1,181 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீனாவில் புதிதாக 16 Asymptomatic caseகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 15 பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள்.
மேலும், கரோனா முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரிலுள்ள அனைத்து 1.11 கோடி மக்களிடமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 82,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 87 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: சீனாவின் கைப்பாவையாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு - ட்ரம்ப்