பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அந்த பிராந்திய அரசு சார்பாக நேற்று முன்தினம் ஹாங்காங் நகரில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தனித்தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறையின் தடுப்பை மீறி ஹாங்காங் சட்டப்பேரவைக் கட்டடத்தை முற்றுகையிட்டு, இரும்பு கம்பிகளால் அக்கட்டடத்தின் கண்ணாடிச் சுவர்களை உடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த பொருட்களைச் சூறையாடியும், சுவர்களில் மத்திய சீன அரசுக்கு எதிராக வாசகங்களை எழுதியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், ஹாங்காங்கில் பெரும் பதற்றம் நிலவியது.
இதுதொடர்பாக சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எடிட்டோரியல் பக்கத்தில் செய்தி வெளிவந்துள்ளது.
அதில், கண்மூடித்தனமான அகந்தையும், ஆந்திரமும் கொண்ட போராட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்கை துளியளவும் மதிக்காமல் இச்செயலைச் செய்துள்ளதாகவும், இம்மாதிரியான அபாயகர நடவடிக்கைகளுக்கு சீன சமூகத்தின் சகிப்புத்தன்மையில்லா கொள்கையே ஒரே தீர்வாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சீனா டெய்லி என்று மற்றொரு அரசு செய்தித்தாளில் வெளிவந்துள்ள எடிட்டோரியலில், ஹாங்காங் சீனாவின் பிரிக்கமுடியாத அங்கம் என்றும், அங்குள்ள பிரச்னைகள் சீனாவுக்கு முக்கியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டப்பேரவையில் நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹாங்காங் நிர்வாக அலுவலர் கேரி லேம், இச்சம்பவம் தனக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுத்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.