கரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமின்றி அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக கடந்த மே மாதம் அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டன. இருந்தபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிப்பு கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா வழங்கியது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்தது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான முடிவு குறித்து சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது. உலக சுகாதார அமைப்பின் ஒப்பந்தத்திலிருந்து விலகுதல், அவற்றை மீறுதல் அமரிக்காவின் மற்றொரு ரூபத்தை நிரூக்கிறது.
உலக சுகாதார அமைப்பு என்பது உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பு அமைப்பு. இதிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளில் பின்னடைவு ஏற்படுத்தும். குறிப்பாக, சர்வதேச ஆதரவின் அவசர தேவையில் வளரும் நாடுகளில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...சீன தயாரிப்புகளுக்கு 49% இந்திய மக்கள் ஆதரவு!