ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 39 பேரை, ஆஸ்திரேலியா ராணுவம் இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றதாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுவந்தன. இந்தப் புகைப்படங்களை சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் ( Zhao Lijian) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், "இந்தப் பதிவுக்கு சீன அரசு முற்றிலும் வெட்கப்பட வேண்டும். இது உலகின் பார்வையில் அவர்களின் தரத்தைக் குறைக்கிறது. அவர்கள் நிச்சயமாக மன்னிப்புக் கோர வேண்டும். மேலும், ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலியான பதிவை உடனடியாக நீக்க வேண்டும்" எனக் கேட்டுகொண்டார்.
தற்போது, ஆஸ்திரேலியா பிரதமருக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. அந்தப் பதிவில், "ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதற்காக, ஆஸ்திரேலிய அரசுதான் வெட்கப்பட வேண்டும்.
ஆப்கான் மக்களிடம் ஆஸ்திரேலியா மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே பதற்றமாக இருந்த உறவில் மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.