பீய்ஜிங் (சீனா): கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஐந்து நாட்களில் சீன அரசு மருத்துவமனையை கட்டியுள்ளது.
ஹெபெய்(Hebei) மாநிலத்தில் இந்த புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 1,500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சீன அரசு இதுபோன்று மேலும் ஐந்து மருத்துவமனைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது எஞ்சிய அந்த 5 மருத்துவமனைகள் அடுத்த வாரத்துக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் கட்டி முடிக்கப்பட்டால் மொத்தம் 6,500 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க முடியும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.
சீன அரசு கோவிட்-19 தொற்றை பெருமளவு கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கோங் (Nangong) நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் கிருமி தொற்று அதிகரித்து வருகின்றது. பலர் தொடர்ந்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அரசு இந்த முடிவை எடுத்து, துரிதமாக மருத்துவமனைகளை அமைத்து வருகிறது.