கம்போடியாவின் சிகானோக்வில் நகரில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கியது.
முதல் நாள் நடைபெற்ற மீட்பு பணியின்போது மூன்று பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் அதைத் தொடர்ந்து ஒரு சிலர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர். மேலும் நேற்று கம்போடிய பிரதமர் ஹன் சென் விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடைபெற்ற கட்டடத்தை கட்டிவந்த சீனா நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கம்போடிய அரசு தெரிவித்துள்ளது.