சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் வைரஸ் பரவல் குறித்து அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்காததால் நாடு முழுவதும் வைரஸ் வேகமாகப் பரவியது.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சீன அரசு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. பல இடங்களில் தற்காலிக கரோனா சிறப்பு மருத்துவமனைகளையும் ஏற்படுத்தின.
சீன தலைநகர் பெய்ஜிங் நகரிலுள்ள சியாடாங்ஷன் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனையை சீன அரசு வெறும் ஆறு நாள்களில் கட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெய்ஜிங் நகரில் கோவிட்-19 தொற்று கிட்டத்தட்ட முற்றிலும் கட்டுக்குள் வந்ததையடுத்து பெய்ஜிங்கிலுள்ள சியாடாங்ஷன் மருத்துவமனையை மூடும் பணிகளை பெய்ஜிங் மாநகராட்சி தொடங்கியுள்ளது.
முன்னதாக கரோனா முதலில் கண்டறியப்பட்டு கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருந்த, வூஹான் நகரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் குணமடைந்தால் அந்த நகரில் செயல்பட்டுவந்த 16 தற்காலிக மருத்துவமனைகளை சீனா மூடியது.
இருப்பினும் திங்கள்கிழமை ஆறு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களில் மூன்று பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மற்ற மூவருக்கும் சமூக பரவல் காரணமாக வைரஸ் பரவியுள்ளது.
இதுதவிர கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆனால் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் asymptomatic case-களின் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்துவருகிறது.
அந்நாட்டில் புதிதாக 40 பேருக்கு இப்படி வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது. இதன் மூலம் asymptomatic case-களின் எண்ணிக்கை சீனாவில் 599ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!