நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வரவுள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திப்பார். மேலும், அக்டோபர் 5ஆம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது இருநாட்டிற்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களும் வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் மூன்று இருதரப்புத் திட்டங்களைத் திறந்து வைப்பார்கள்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய பொருளாதார மாநாட்டிலும் பிரதமர் ஷேக் ஹசினா கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர்களின் சந்திப்பு குறித்து பேசிய வங்க தேச தலைமைத் தூதர் சையத் முஸ்ஸெம் அலி, "டீஸ்டா, ரொஹிங்யா உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் ஷேத் ஹசினா, இந்தியப் பிரதமருடன் ஆலோசிக்கவுள்ளார். கலாசாரம், தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாட்டிற்கு இடையே எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது உறுதியாகியுள்ளன" என்றார்.
நான்காவது முறையாக பிரதமாக பதவியேற்ற பின்பு, ஷேக் ஹசினா மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன தேசத்தின் அஸ்திவாரத்தை அசைக்க எந்த சக்தியும் இல்லை: அதிபர் ஜி ஜின்பிங்