அகர்தலா : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கு வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா சுவையான ஹரிபங்கா வகை மாங்கனிகளை பரிசாக அளித்துள்ளார் என அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் முகம்மது ஜோபாய்ட் ஹோசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வங்க தேசத்துக்கான இந்தியத் தூதர் முகம்மது ஜோபாய்ட் ஹோசன், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்-ஐ சந்தித்தார். அப்போது, வங்க தேச பிரதமர் கொடுத்த மாங்கனிகளை முதலமைச்சருக்கு பரிசாக கொடுத்தார்.
தொடர்ந்து அவர் ட்விட்டரில், “முதலமைச்சர் மாங்கனிகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா- வங்கதேசம் நட்புறவு கடந்த காலங்களை போல் வலிமையாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடி தவிர மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் பரிசாக ஹரிபங்கா மாங்கனிகளை அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஹோசன் கூறுகையில், “ஹரிபங்கா ஒரு சிறப்பான வகை மாம்பழம். இது வங்க தேசத்தின் ரங்பூர் பகுதியில் விளைகிறது. உள்ளூர் மக்களின் வாழ்வியல் ஆதாரமாகவும் திகழ்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது” என்றார்.
இதையடுத்து, கூடுதல் தூதர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஹரிபங்கா சுவைமிகு மாம்பழம். இதன் தேவை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் இதில் பெரிதும் கவனம் செலுத்திவருகின்றனர். ஹரிபங்கா மாம்பழங்கள் வட்ட வடிவில், கறுப்பு நிறத்தில் சதை மிகுந்து காணப்படும். எடையை பொறுத்தவரை குறைந்தப்பட்சம் 200 கிராம் முதல் அதிகப்பட்சம் 400 கிராம் வரை இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க : கொல்கத்தாவுக்கு கிரிக்கெட் பார்க்க வந்த வங்க தேச பிரதமர்!