கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 7 மணியளவில் ஏற்பட்ட தீ, வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், இரவு 12 மணிக்குள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பெரும்பாலான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்டன. இச்சம்பவத்தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை, நான்கு பேர் மட்டும் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து உள்ளூர் காவலர் ஒருவர் கூறுகையில், "இங்குத் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் அருகில் உள்ள ஆடை தயாரிக்கும் ஆலையில் பணியாற்றுபவர்கள். தீ விபத்து ஏற்பட்டபோது பெரும்பாலானவர்கள் இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-ஆதா கொண்டாட குடும்பத்துடன் வெளியே சென்றிருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது" என்று கூறினார்.
மேலும், நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வங்கதேசப் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எனமூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மாலை நேரத்தில் நடந்த இந்த பெரும் தீ விபத்தில் சுமார் 10,000 பேர் தங்கள் சொந்த வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.