அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர், காவலர் ஒருவரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறவெறி படுகொலையை எதிர்த்து அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கறுப்பின மக்களை அடிமைப்படுத்திய நபர்களின் சிலைகளும் சூறையாடப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சிட்னி ரேடியோ 2BC வானொலிக்குப் பேட்டியளித்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "ஆஸ்திரேலியா ஒரு நாடாக உருவாகிவந்த காலத்தில் அடிமைக் கப்பல்கள் உலகைச் சுற்றிவந்தது உண்மைதான். ஆனால், ஆஸ்திரேலியாவில் அடிமைத்தனம் என்பதே இருந்ததில்லை" எனக் கூறினார்.
இந்தக் கருத்து அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அடிமைத்தன வரலாற்றை ஸ்காட் மோரிசன் மறுப்பதாக அடுக்கடுக்காக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தன் கருத்து குறித்து விளக்கமளித்த பிரதமர் மோரிசன், "யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்தக் கருத்தை நான் வெளிப்படுத்தவில்லை. என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலணி ஆதிக்கக் காலத்தில் சிட்னியில் அடிமைத்தனம் செய்வது சட்டத்துக்கு எதிரான செயலாகவே கருதப்பட்டது" என்றார்.
இதனிடையே, அந்நாட்டில் பிரபல மலைப் பிரதேசமான கிங் லியோபாட் ரேஞ்சசின் பெயரை மாற்ற உள்ளதாக வெஸ்டன் ஆஸ்திரேலிய மாகாண அரசு அறிவித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பெல்ஜியம் நாட்டு அரசரான லியோபாட், காங்கோவில் பலரை வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்தினார். பெல்ஜியம் நாட்டின் அன்ட்வெர்ப் நகரில், இவருக்கு வைக்கப்பட்டிருந்த சிலையைப் போராட்டக்காரர்கள் அடித்து உடைத்ததையடுத்து இந்த அறிவிப்பானது வெளியானது.
இதையும் படிங்க : காவல் துறையினரின் நிறவெறிக்கு எதிராக பிரேசில் நாட்டினர் ஆர்ப்பாட்டம்