ஆஸ்திரேலியாவின் காடுகளில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவியது. இந்தக் காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட காடுகளையும் வனவிலங்குகளையும் மீட்டெடுக்க ஆஸ்திரேலிய அரசு சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்களை ( 34 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அறிவித்துள்ளது.
காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட கோலா கரடிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸிலுள்ள மருத்துவமனையை பார்வையிட்ட ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க், இந்தக் காட்டுத்தீயை சுற்றுச்சூழல் பேரழிவு என்று குறிப்பிட்டார்.
இந்தக் காட்டுத்தீயால் சுமார் 1.25 பில்லியன் வன விலங்குகள் பலியாகியிருக்கலாம் என்று ஆஸ்திலிய WWF அமைப்பு கணக்கிட்டுள்ளது. குறிப்பாக சுமார் 30,000 கோலா கரடிகள், இந்தக் காட்டுத்தீயில் பலியாகிருக்கலாம் என்று அதிர்ச்சி தகவலை ஆஸ்திலியா WWF அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தக் காட்டுத்தீயில் பெரும்பாலான காடுகள் முற்றிலும் நாசமடைந்துள்ளதால், உயிர்பிழைத்துள்ள விலங்குகளும் உணவுக்கு பெரும் சிரமத்தை சந்தித்துவருகிறது. கடந்த வாரம் வொலேமி தேசிய பூங்கா ஊழியர்கள், ஹெலிகாப்டர் மூலம் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை காடுகளில் வீசினர். இதன்மூலம் அங்குள்ள விலங்குகளுக்கு காய்கறிகள் கிடைப்பதை உறுதிசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தண்ணீர்.. தண்ணீர்..!' ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு!