இது குறித்து ஊழல் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "1986ஆம் ஆண்டு ஜாங் குரூப் செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் மிர் ஷகிலூர் ரஹ்மானுக்குச் சட்டத்தை மீறி நிலத்தைக் குத்தகைக்கு விடப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு கைது ஆணை பிறப்பித்துள்ளது" என்றார்.
கடந்த மாதம் (மார்ச்) 12ஆம் தேதி ரஹ்மானைக் கைதுசெய்த ஊழல் தடுப்பு அமைப்பின் அலுவலர்கள், அவரை காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.
பாகிஸ்தானில் பிரதமராக மூன்று முறை பதவிவகித்த நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்க ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனிடையே, 70 வயதான அவர் உடல்நலக் கோளாறு காரணமாக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று லண்டனில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கடந்த மாதம் (மார்ச்) 20ஆம் தேதி லாகூரில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பு அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு நவாஸுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு அவர் இதுவரையில் பதிலேதும் தெரிவிக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை 'விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றவாளி' என அறிவிக்கக் கோரி அந்த ஊழல் தடுப்பு அமைப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
இதையும் படிங்க : அமைதி ஒப்பந்தத்தை ஆப்கான் அரசு சூறையாடுகிறது - தலிபான் குற்றச்சாட்டு