அர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் அஸர்பைஜான் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துவருகிறது. அஸர்பைஜானுக்குள்ளேயே தன்னை குடியரசுப் பகுதியாக அறிவித்துக்கொண்ட நகோர்னோ-காரபாக் பகுதியில் நடந்துவரும் இந்தச் சண்டை, சுமார் மூன்று வார காலமாக நீடித்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 27இல் நடந்த பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் இந்த நாடுகளுடன் நட்புறவு வைத்துள்ள ரஷ்யா சமரசம் செய்திட உள்ளே வந்தது. மாஸ்கோவில், இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் நடத்திய 11 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறிப் போரை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது
இதனால் விரக்தியடைந்த ரஷ்யா, இன்று மீண்டும் நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடர்பாக தொலைபேசியில் உரையாடியுள்ளது. அப்போது அர்மீனியா மற்றும் அஸர்பைஜாவின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், மாஸ்கோவில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைக் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அர்மீனியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அர்மீனிய குடியரசும் அஸர்பைஜான் குடியரசும் அக்டோபர் 18, நள்ளிரவில் ஒரு மனிதாபிமான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளன" என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அர்மீனியா, அஸர்பைஜான் நாடுகளின் பல ஆண்டுகால பிரச்னையை ரஷ்யாவின் இரண்டாம் முயற்சி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.