பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்வாட் மாவட்டத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு ஆலயம் பாகிஸ்தான், இத்தாலிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்றியப்பட்டுள்ளது. இந்தக் இந்துக்கோயில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. ஸ்வாட் மாவட்டம் மலைகள் நிறைந்த பகுதியாகும்.
கைபர் பக்துன்வாவில் உள்ள பைசல் காலிக் தொல்லியல் ஆராய்ச்சி குழுவினரும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பாரிகோட் குந்தாய் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை (நவ.19) இப்பகுதியில் அழகிய விஷ்ணு கோயில் ஒன்றை கண்டுபிடித்தனர்.
இந்தக் கோயில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகிறது. மேலும் கோயிலுக்கு அருகில் தெப்பக் குளமும் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் நீராடிவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் வழிபாடு நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோயில் குறித்து பாகிஸ்தான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது ஒரு விஷ்ணு ஆலயம். அருகில் குளங்களும் இதர கட்டட அமைப்புகளும் உள்ளன.
இந்தக் கோயில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்து சாகி மன்னர்களின் காலங்களில் கட்டப்பட்டிருக்கலாம். இந்து சாகி மன்னர்கள் ஆப்கானிஸ்தானின் கிழக்கு (காபூல் பள்ளத்தாக்கு) மற்றும் பாகிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள பகுதியை ஆட்சி செய்தவர்கள். இந்த மன்னர்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளையும் ஆட்சி செய்துள்ளனர்” என்றனர்.
கோயில் குறித்து இத்தாலிய ஆராய்ச்சியாளர் டாக்டர் லுக்கா கூறுகையில், “ஸ்வாட் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் இந்துக் கோயில் இது” என்றார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஸ்வாட் மாவட்டம் கட்ட கலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், வழிபாட்டு தலங்கள் என தொல்லியல் சார்ந்த பல இடங்கள் உள்ளன.
ஸ்வாட் மாவட்டத்தில் பழங்கால புத்த வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கயா விஷ்ணுபாதம் கோயில்!