பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது லன்டனில் வசித்துவருகிறார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி சிகிச்சை தேவைக்காக அவர் லண்டன் சென்றார்.
அவர் பிரதமர் பதவியிலிருந்தபோது பெரும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், பாகிஸ்தான் நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்பளித்து சிறை தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில், சிகிச்சையைக் காரணம் காட்டி எட்டு வாரங்கள் பிணை பெற்ற அவர், அரசிடம் அவசர ஒப்புதல் வாங்கி வெளிநாடு சென்றார்.
நவாஸ் வெளிநாடு செல்ல ஒப்புதல் அளித்த முடிவை தற்போது தவறான ஒன்றாக நினைத்து வருந்துவதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், மனித நேய அடிப்படையில் அப்போது நவாஸ் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தோம். ஆனால், லண்டனிலேயே தங்கிக்கொண்ட அவர், அங்கிருந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார் என கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும், நவாஸ் ஷெரிப் தொடர்பான எந்தவித முடிவுக்கும் பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என அந்நாட்டின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது இம்ரான் கானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிதான் - குலாம் நபி ஆசாத் விமர்சனம்