பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியத் தூதரகம் சார்பாக, இன்று மாலை, இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா நட்சத்திர விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தூதரக அலுவலர்கள், பாகிஸ்தான் அரசியல்வாதிகள், சுஃபி தலைவர்கள், எழுத்தாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் அரிஃப் அல்வி ஆகியோருக்கு விடுத்த அழைப்பை மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், இஃதார் விருந்து நிகழ்ச்சிக்கு கலந்துக்கொள்ள வந்த விருந்தினர்களை பாகிஸ்தான் காவல்துறையினர் விடுதி வளாகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். பாகிஸ்தான் காவல்துறையினரின் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இந்தியத் தூதரகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "விருந்தினர்கள் பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்மூலம் இந்தியத் தூதரகத்தை இஃப்தார் நிகழச்சியை நடக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. இது தூதரக விதிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமனது. நாகரிகமற்ற செயலாகும். இது குறித்து பாகிஸ்தான் அரசு விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.