ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூஸா குவாலா என்ற மாவட்டத்தில் அல்-குவைதா பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக, அந்நாட்டு உளவுத் துறையான தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத்துக்கு (National Directorate of Security) ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மூஸா குவாலா மாவட்டத்தில் அமெரிக்க - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் அங்கு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்தியத் துணைக் கண்டத்திற்கான அல்-குவைதா தலைவர் அசீம் உமர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவராவார். அப்பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பல்வேறு மூத்தத் தலைவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தேசியப் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டிருந்த ட்வீட்டில், "ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூஸா குவாலா மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில், இந்தியத் துணைக் கண்டத்துக்கான அல்-குவைதா தலைவர் அசீம் உமர் கொல்லப்பட்டார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க : பின்லேடன் மகன் கொல்லப்பட்டார் - ட்ரம்ப் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா-தலிபான் இடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் திடீரென முறிந்துபோன நிலையில், அசீம் உமர் கொல்லப்பட்டார்.