ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று மூன்று தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து கபூல் துணை பாதுகாப்புப் படையின் உயர் அலுவலர் கூறுகையில், "முதல் குண்டுவெடிப்பானது காலை 08.10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் தற்கொலைத் தாக்குலால் நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலானது சுரங்க, பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து நடந்துள்ளது.
மேலும், இரண்டாவது குண்டுவெடிப்பானது பேருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் நிகழ்ந்தது. மூன்றாவது தாக்குதல் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த பகுதியில் வெடிபொருள்கள் நிறைந்த வாகனத்தில் வைத்து நிகழ்த்தப்பட்டது" என்றார்.
இது குறித்து உள் துறை அமைச்சகம், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு எதிராக தலிபான் அமைப்பு செயல்பட்டுவருவதாகவும், இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக காபூலில் ஜூலை 19ஆம் தேதி நிகழ்ந்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.