ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இருவருக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நேற்று (அக்.21), ஆப்கானிஸ்தானின் தாஹர் மாகாணம் பஹர்க் மாவட்டத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாதுகாப்புப்படையினர் மீது பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 ஆப்கான் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்.22) பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் மசூதியில் மறைந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அப்பகுதியில் ஆப்கான் அரசு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இதை முன்கூட்டியே அறிந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இத்தாக்குதலில் 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாக இரு தரப்பினரின் மத்தியிலும் நடக்கும் தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களிருந்து விரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.