ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. குறிப்பாக பாதுகாப்பு படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தலிபான் அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் காபூலில் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் ஜாமீல் என்பவர் மசூதிக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று, மசூதியில் சிறப்பு வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்மாதிரியான தாக்குதல்களை நடத்துவது தலிபான் அமைப்புதான் என அரசு தரப்பு தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்துவருவது வழக்கமான ஒன்று. நவம்பர் மாதத்தில் மட்டும் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.