ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இருதரப்பினருக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர்.
குறிப்பாகப் பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது. அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும் விமானப் படையும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் நவா மாவட்டத்தில் நேற்று (டிச.27) பயங்கரவாதிகளைக் குறிவைத்து விமானப்படையினர் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 11 அல்கொய்தா பயங்கரவாதிகளும், இரண்டு தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹெல்மண்ட், காந்தஹார் மாகாணங்களில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். முன்னதாக ஜனவரி 15ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.