ஹைதராபாத்: உலக அளவில் பாலூட்டிகள், மீன்கள், பறவைகள், ஊர்வனங்கள் உள்ளிட்டவை 1970 முதல் 2016 வரை 68% அழிந்திருப்பதாக சர்வதேச வனவிலங்கு நிதியகம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் இதன் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அப்பகுதிகளில் 94% உயிரினங்கள் அழிந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் நன்னீர் வாழ் உயிரினங்கள் 84% அழிவைச் சந்தித்துள்ளன. இது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு அறுந்துபோயிருப்பதை காட்டுகிறது. தற்போதைய கரோனா சூழல் இன்னும் அதிக அழிவுக்கு வழிவகுத்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச வனவிலங்கு நிதியகத்தின் (அமெரிக்கா) தலைவர் கார்டர் ராபர்ட்ஸ், இந்த அறிக்கை நாம் வாழும் பூமியை நாமே அழிப்பதற்கான குறியீடுகளாகும். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக நாம் காடுகளுக்கு இடம்பெயர்ந்தோம். ஆனால், இயற்கையை காக்க மறந்துவிட்டோம். எனவே சுற்றுச்சூழல் அழிவின் தாக்கத்தில் இருந்து மனித இனத்தை காப்பது சிரமமானது. இதுதான் சரியான நேரம், இயற்கையோடு அறுந்துபோன நம் உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள என தெரிவித்தார்.
சர்வதேச வனவிலங்கு நிதியகத்தின் தலைமை விஞ்ஞானி ரெபக்கா ஷா, இளைஞர்கள் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான உறவில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் தலைவர்களிடம் இயற்கையை பாதுகாக்க வேண்டி வலியுறுத்துகின்றனர். நாம் அவர்களுடைய போராட்டத்துக்கு உறுதுணையாக உடன் நிற்க வேண்டும் என்கிறார்.