ஹைதராபாத்: கடந்த 30 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 680 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2020ஆம் ஆண்டு உலகளவில் தங்களது பணிகளைச் செய்துகொண்டிருந்த 65 ஊடகவியலாளர்கள், தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள், தவறுதலாகக் குண்டு பாய்ந்தது போன்ற சம்பவங்களால் 16 நாடுகளில் பத்திரிகையாளர்களின் கொலைகள் நடந்துள்ளன.
1990ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கணக்கிட்டதில், 2 ஆயிரத்து 680 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் நான்காவது முறையாக, அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், 14 பத்திரிக்கையாளர்கள் இந்தாண்டு கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ஆப்கானிஸ்தானில் 10 பேரும், பாகிஸ்தானில் ஒன்பது பேரும், இந்தியாவில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட 229 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். உலகின் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் சிறைச்சாலை எனத் துருக்கியைத்தான் கூட்டமைப்பு கூறுகிறது. ஏனென்றால், அங்குதான் 67 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, சீனாவில் 23 பேரும், எகிப்தில் 20 பேரும், சவுதி அரேபியாவில் 14 பேரும் சிறையில் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மியான்மரில் ராணுவ ஆட்சி வந்ததையடுத்து, தற்போது வரை 36 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: பட்லா என்கவுண்டர் வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!