ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. குறிப்பாக பாதுகாப்பு படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தலிபான் அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
கிடைத்த தகவலின்படி, அக்டோபர் 23ஆம் தேதி முதல் 27வரை ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு மாகாணங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 58 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 143 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
காவல் துறை கூற்றுப்படி, காபூல், கஸ்னி, கோஸ்ட் மற்றும் ஜாபுல் மாகாணங்களில் அதிகப்படியான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்கு தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை காபூலில் ஒரு பயிற்சி மையம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் நடந்த தாக்குதல்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதே போல், செவ்வாய்க்கிழமை கோஸ்ட் மாகாணத்தில் வெடிபொருட்கள் நிரம்பிய மூன்று வாகனங்களை வெடிக்க செய்ததில், 5 பொதுமக்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே நாளில், காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், 13 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த நான்கு நாட்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இதுவரை 30 குழந்தைகள் கொல்லப்பட்டதும் உறுதியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளும் கொத்து கொத்தாக ஆப்கான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும் தொடரந்துவருகிறது. நேற்று, தலிபான் தளபதி உட்பட 5 பயங்கரவாதிகளை ஆப்கான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.