பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்களை அங்குள்ள பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கண்டெய்னரிலிருந்து திடீரென்று விஷவாயு வெளியானது. இதில் அங்கு பணியிலிருந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் மயக்கமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு கராச்சி துணை ஐஜி ஷர்ஜீல் கரல்,"ரசாயனங்களை ஏற்றிவந்த கண்டெய்னரை துறைமுக ஊழியர்கள் இறக்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது"என்றார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பைசல் எடி கூறுகையில், "இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் படையினர், மூகமுடியின் உதவியுடன் அங்கு மயக்கம் அடைந்திருந்தவர்களைக் மீட்டு அருகிலுள்ள மருத்துவமணையில் அனுமதித்தனர்" என்றார்
மேலும், மயக்கமடைந்தவர்கள் அனைவரின் உடல்நிலையும் மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், விஷவாயு வெளியான இடத்திலிருந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷவாயு விபத்தில் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அலி ஜைடி, எரிவாயு கசிவுக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - சீனாவில் மேலும் 105 பேர் பலி !