நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியின் இரண்டு இடங்களில் அமைந்துள்ள மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்தடுத்து, இரண்டு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து பார்க்கும் போது, அவர்கள் நியூசிலாந்தில் யாரும் மசூதிக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுப்பதாக தெரிகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், அனைத்து மசூதிகளை மூடக்கோரியும் உத்தரவிட்டுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற அல் நூர் மசூதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு சென்றுள்ள வங்கதேச அணி வீரர்கள், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் ஓட்டலில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன்,
"நியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்" என இரங்கல் தெரிவித்தார்.