ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தலிபான் அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
தலிபான்களுக்கு எதிராக அரசுப் படைகளும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், 19 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. விமானப்படை நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பின் ஹேல்மாந்த் மாகாண ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் முல்லா அமனுல்லா கொல்லப்பட்டுள்ளார் என்றும், அவருடன் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்கள், டாங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஃபரியப் மாகாணத்தில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், கைசர் மாவட்டத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.