சென்னை: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அதில் ஏரிகளும், குளங்களும் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தண்ணீர் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச மழை பெய்த இடங்களாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் உள்ள நிலையில் தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீரை திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் மீது அக்கறை இல்லை:
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு. சிந்திக்கும் திறனற்ற அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது".
"நள்ளிரவு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை பேரூராட்சி, திருக்கோயிலூர் நகராட்சி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி, கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம், மேல்குமாரமங்கலம் புலவனூர், கண்டரக்கோட்டை, கள்ளிப்பட்டு உள்ளிட்ட முதன்மைப் பகுதிகளையும், இவற்றைச் சுற்றியுள்ள பல நூறு கிராமங்களையும் சுற்றி வளைத்த வெள்ளம், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறியிருந்தார்.
நள்ளிரவு அணையில் இருந்து நீர் திறப்பு:
மேலும், "நள்ளிரவில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்த விவரம் அப்பாவி மக்களுக்கு தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பிறகு தான் மக்களுக்கு விவரமே தெரிந்திருக்கிறது".
இதையும் படிங்க: தி.மலை நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
"அதைத் தொடர்ந்து, உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் அவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். இதனால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால் அங்குள்ள மக்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த எஜமானரின் ஆணைக்காக காத்திருக்கிறார்கள்?
விவசாயிகள் பாதிப்புக் குறித்து பேசியிருக்கும் இராமதாசு, "பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன. சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (டிச.1) பகலிலேயே அதிகரிக்கத் தொடங்கி விட்டது".
"அடுத்த சில மணி நேரங்களில் அணை நிரம்பி விடும் என்பது பொறியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், எந்த எஜமானரின் ஆணைக்காக அவர்கள் காத்திருந்தார்கள்? என தெரியவில்லை. 2015-ஆம் ஆண்டில் ஒரு நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டதை விட பல மடங்கு பேரழிவுக்கு திமுக ஆட்சி காரணமாகியிருக்கிறது," என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "தி.மலை மண்சரிவில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" - தவெக தலைவர் விஜய் உருக்கம்!
மேலும், "சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்".
"சாத்தனூர் அணையை முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் திறந்து பேரழிவை ஏற்படுத்தியதற்கான தமிழ்நாட்டு மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்".
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமான 4 மாவட்டங்கள்: குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்குங்கள்!@CMOTamilnadu #FengalCyclone #DMKFloodDisaster pic.twitter.com/64olpvWzaW
— Dr S RAMADOSS (@drramadoss) December 3, 2024
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்,” என்று அரசிடம் பல கேள்விகளை எழுப்பி மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க கோரிக்கை வைத்து தன் பதிவை பாமக நிறுவனர் இராமதாசு நிறைவு செய்துள்ளார்.