சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டயோஷிடோங் சுரங்கத்தில் சிக்கி, 18 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர். ஐந்து பேர் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின், சோங்க்விங் மாகாணத்தைச் சேர்ந்த யோங்சுவான் மாவட்டத்தில் நேற்று (டிச.04) மாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தச் சுரங்கம் மூடப்பட்ட நிலையில், நேற்று சுரங்கத் தொழிலாளர்கள் 24 பேர் அங்கிருந்த உபகரணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கக் குழிக்குள் சிக்கிய தொழிலாளர்கள், அதிகப்படியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான உறுதியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகில் அதிகப்படியான நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அதிகரிக்கும் கரோனா பரவல் : எவ்வாறு நடக்க உள்ளது பதவியேற்பு விழா?