டமாஸ்கஸ்: சிரியா நாடு போராட்ட பூமியாகவே நீண்ட காலம் இருந்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் எனப் பொதுமக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில், இரண்டு மருத்துவமனை ஊழியர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசு பாதுகாப்பு படையும், குர்திஷ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் நிறுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வந்த ராக்கெட் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு குர்தீஷ் இயக்கம்தான் காரணம் என அம்மாகாணத்தின் ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளைப் பெற இத்தகைய தாக்குதல்கள் அரங்கேறுவதாக கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.